கொஞ்ச நேரமே பார்க்க நேர்ந்தாலும்
அந்த அரிதான நொடிகளை
மனம் அழகாய் ரசிக்கப் பழகிவிட்டது
சந்திப்புகளில் மட்டுமே திருப்தியடைந்த
மனம் இப்பொழுதெல்லாம்
சந்திப்பில்லாத கணங்களிலும்
நட்பால் திருப்தியடைகிறது
பார்த்து பார்த்து பழகிய வயது
போய் ,பார்வைகளின்றியும்
நட்பின் பகிர்தலை உணர்த்தும்
உனதான என் நட்பில்…
கொஞ்சம் பக்குவம் தெரிந்தாலும்
அழும் குழந்தையாகவே என் மனம்
கேட்கிறது.
இப்பொழுதும்
திரும்பவும் சந்திக்கும் தருணங்களை…
இது நட்பின் குழந்தைதனமா?
இல்லை
குழந்தைத் தனம் தான் நட்பா?